Dec 5, 2010

துறவியும் மீனும் (The Monk and The Fish )

http://upload.wikimedia.org/wikipedia/en/8/80/Monk_and_Fish.jpg

பௌத்த மடாலயம் ஒன்றின் அருகில் ஒரு நீர்தேக்கமிருக்கிறது. ஒரு நாள்  குள்ளமும் பருமனுமான பிக்கு ஒருவன் அந்த நீர்தேக்கத்தில் ஒரு மீன் துள்ளிக் கொண்டிருப்பதை காண்கிறான். உடனே அதை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மடாலயத்திற்குள் சென்று தூண்டிலை எடுத்து கொண்டு வருகிறான்.

தூண்டில் போட்டு காத்திருக்கிறான். அந்த மீன் தூண்டலில் சிக்கவேயில்லை. அது துள்ளித் துள்ளி விளையாடியபடியே இருக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டு
தூண்டிலுக்குப் பதிலாக ஒரு பிடிவலையை கொண்டுவருகிறான் பிக்கு. அந்த வலையிலும் மீன் மாட்ட மறுக்கிறது.


இரவெல்லாம் உறக்கமற்று மீனைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கிறான். அதை பிடிக்க ஏதாவது வழியிருக்கிறதா  என்று புத்தகங்களை தேடிப் படிக்கிறான். இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதை பிடிக்க முயற்சிக்கிறான். எதிலும் மீன் சிக்கவேயில்லை.


உடனே தனது சக துறவிகளை அழைத்து கொண்டு வந்து கூட்டு முயற்சியாக அதை பிடிக்கப்  பார்க்கிறான். அப்போதும் மீன் அகப்பட மறுக்கிறது. ஆத்திரமான பிக்கு அந்த மீனைத்  துரத்துகிறான். அது தப்பி தப்பியோடுகிறது. மீனைக்  கொல்வதற்காக ஒரு வில்லை கொண்டு வருகிறான்.


அம்பு எய்து அதைப்  பிடிப்பது என்று முயற்சிக்கிறான். அந்த மீன் அவனோடு விளையாட்டு காட்டுவது போல நீர்த்தேக்கத்திலிருந்து துள்ளி அடுத்த நீர்நிலைகளுக்குப்  போகிறது. தண்ணீருக்குள் விழுந்து புரண்டு அதை பிடிக்க முயற்சிக்கிறான். மீன் தப்பியபடியே இருக்கிறது. அதை பின்தொடரத்  துவங்கிய பிக்கு அலைக்கழிப்பின் பிறகு சட்டென ஒரு உண்மையை புரிந்து கொள்கிறான்.


மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம். அதன் போக்கில் நாமும் ஒன்று கலந்துவிட வேண்டும் அதுவே மீனைப் புரிந்து கொள்ள வழி என்று நினைக்கிறான். மறுநிமிஷம் அவனும் மீனும் நெருக்கமாகிவிடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளி நோக்கி  சந்தோஷமாக வானில் தாவி மறைகிறார்கள்