Dec 6, 2010

'பொய் சொல்லக்கூடாது

நமது பால்ய காலத்தை! 
'பொய் சொல்லக்கூடாது... திருடக்கூடாது... கஷ்டம் வந்தால் மூட்டை
தூக்கிக்கூடப் பொழைக்கலாம், தப்பில்லை...' என்று எத்தனை எத்தனை நல்ல
விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்தார்கள்.
 ஆனால், இன்று..? அந்த அடிப்படை நல்லொழுக்கமே மெள்ள மெள்ள
நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது.
பாமரர்களைவிடப் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமே அதிகம் பொய்
சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
 வீட்டில் போன் மணி அடித்தால், 'அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு' என்று
குழந்தைகளுக்கு நாமே பொய் சொல்லக் கற்றுத் தருகிறோம்.
 'ஏன் லேட்..?' என்று யாராவது கேட்டால், நம் கைவசம் ஏதோ ஒரு பொய்
எப்போதும் தயாராக இருக்கிறது.
 தெரிந்தே ஒரு பொய்யை மெய் என்று நம்புவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது,
தெரியுமா..?
 இதோ, இந்தக் கதையைப் படியுங்கள்.
 ஒரு முறை முல்லா, பக்கத்து வீட்டுக்காரரிடம் பானை ஒன்றை இரவல்
வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் தயங்கித் தயங்கி,
''என் பானையைத் திருப்பிக் கொடுக்க முடியுமா..?'' என்று முல்லாவிடம்
கேட்டார்.
''அடடா... உங்களிடம் இரவல் வாங்கிய பானையை உடனே திருப்பிக்
கொடுக்காமல் மறந்துபோனதிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆமாம்... உங்கள்
பானை ஒரு குட்டி போட்டிருக்கிறது, பாருங்கள்!'' என்று சொல்லி, தான் இரவலாக
வாங்கிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையையும் கொடுத்தார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.
 அடுத்த வாரமே முல்லா மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று, ''போன
தடவை கொடுத்ததைவிடப் பெரிய பானை ஒன்று இருந்தால், இரவலாகக்
கொடுங்களேன்!'' என்று கேட்க... அவரும் 'ஒன்றுக்கு இரண்டாகப் பானை
கிடைக்கும்' என்று சந்தோஷத்தோடு, வீட்டிலிருந்த மிகப்பெரிய பானையைத் தூக்கி
முல்லாவிடம் கொடுத்தார்.
 ஒரு வாரம் ஆயிற்று. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று, தான்
இரவலாகத் தந்த பானையைத் திரும்பக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
 ''அதை ஏன் கேக்கறீங்க..? நேத்து உங்க பானை செத்துப்போச்சு!'' என்றார்
முல்லா.
 பக்கத்து வீட்டுக்காரருக்கு மகா எரிச்சலாகி விட்டது! ''என்னை என்ன மடையன்னு
நினைச்சியா..? பானை எப்படிச் செத்துப்போகும்..?'' என்றார் கோபமாக.
 ''பானை குட்டி போட முடியும்னு உன்னால் நம்பமுடியுது. பானை செத்துட்டதுனு
சொன்னா நம்பமுடியலையா..?'' என்று திருப்பிக் கேட்டார் முல்லா. பக்கத்து
வீட்டுக்காரர் வந்த சுவடே தெரியாமல் நடையைக் கட்டினார்.
 இப்போது புரிகிறதா..? பொய் சொல்வது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு -
பொய் என்று தெரிந்தும் அதை நம்புவது!