Dec 5, 2010

ஜென் குரு ஒருவர் மல்யுத்த வித்தையிலும் சிறந்து விளங்கினர்

ஜென் குரு ஒருவர் மல்யுத்த வித்தையிலும் சிறந்து விளங்கினர். அந்தப் பகுதியில் அவரை மல்யுத்தத்தில் வெல்ல யாரும் இல்லை என்னும் வண்ணம் பெயர் பெற்றிருந்தார்.

அந்த ஊருக்கு வயதில் இளைய மல்யுத்த வீரன் ஒருவன் வந்தான்.
குருவை மல்யுத்தத்தில் வீழ்த்துவேன் என்று அனைவரிடமும் சூளுரைத்தான். உடல் வலிமை மட்டுமன்றி தந்திரத்திலும் சிறந்து விளங்கியவன் அவன். அவனுடன் மோதுபவர்களின் அசைவுகளை நன்கு கவனித்து முதலில் அவர்களை இயங்கவைத்து எதிரியின் பலவீனத்தைக் குறித்துக் கொண்டு அவர்களை அடித்து வீழ்த்தும் தந்திரத்தைக் கையாண்டு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியையே சந்தித்து வந்தான். அவனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியவில்லை.

தன்னுடைய சீடர்களின் அறிவுரைகளை மீறி குரு அந்த இளைஞனுடன் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தார். போட்டி துவங்கியது. இருவரும் எதிரெதிர் நின்றதும் இளைஞன் குருவை நோக்கி மிகவும் மோசமான வசவுகளால் திட்டத் துவங்கினன். அவருடைய முகத்தில் மண்ணை வாரித்தூற்றிக் காரி உமிழத் துவங்கினன். நீண்ட நேரம் அவரைத் தூற்றிக் கொண்டே இருந்தான். குருவும் ஒன்றும் சொல்லாது அவன் எதிரில் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தார். இளைஞனின் திட்டுதல் மணிக்கணக்கில் தொடர்ந்து ஒருவழியாகக் களைப்படைந்து ஓய்ந்து கீழே சரிந்து விழுந்தான்.

சீடர்கள் அனைவரும் குருவைச் சூழ்ந்து கொண்டனர். “உங்களை இவ்வளவு தூற்றியும் அவமானப் படுத்தியும் நீங்கள் ஏன் அவனை அடித்து வீழ்த்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தீர்கள்?” எனக் கோபத்துடன் வினவினர்கள்.

குரு புன்னகையுடன் கேட்டார், “நீங்கள் யாருக்காவது பரிசளிக்க ஏதாவது பொருளை எடுத்துப் போகிறீர்கள். அந்த நபர் அப்பரிசை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்தப் பொருள் யாருடைய உடமையாக இருக்கும்?”