மலைப்பகுதியில் தனியாய் குதிரைமீது பாடல்கள் பாடியபடி வந்து கொண்டிருந்தார் ஜென் ஞானி.
மாலையாகிவிட்டது. இருட்டத் துவங்கிவிட்டதால் தூரத்தில் வருவது யார் என்று பார்க்கக் கடினமாயிருந்தது. அருகில் எந்த ஊரோ, கிராமமோ தென்படவில்லை.
அந்த வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்த ஜென் ஞானி, தன் முன்னால் யாரோ மயங்கி ரோட்டோரமாகக் கிடப்பதைப் பார்த்தார். உடனே குதிரையை நிறுத்தினார்.
மூச்சு இருக்கிறதா? என்று பார்த்து அந்த நபருக்கு முதலுதவி செய்து குதிரையின் மேலேற்றி அமர்த்தினார்.
சீக்கிரம் இவரை ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று யோசித்தபடி… மயங்கியவரை `நன்றாக அமர்ந்துவிட்டாரா, கீழே விழமாட்டாரா’ என்று ஒருமுறை உறுதி செய்துவிட்டு, `சரி நாமும் ஏறலாம்’ என்று நினைத்து ஏற எத்தனித்தார்.
அதுவரை மயங்கிக் கிடந்தவர் எழுந்துகொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துச் சுண்டினார். சீறிப் பறந்து ஓட, திகைத்து நின்றார். அவன் மயங்கியவனல்ல. அவன் மயங்கியவன் போல நடித்த ஒரு திருடன்.
`அவ்வளவு நேரம் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட எனக்குப் புரியவில்லை.
இது எவ்வளவு பெரிய வேடிக்கை…’ என்று நேற்று இரவு நடந்த திருட்டுச் சம்பவத்தால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் பேசினார் குரு.
இந்த நிகழ்ச்சியில் தங்களின் குருவை ஆச்சரியமாய்ப் பார்த்த சீடர்களில் ஒருவர் கேட்டார்.
‘உங்களுக்கு இது பெரிய திகைப்பாக இல்லையா?’
‘இருந்தது. ஒரு வினாடி இருந்தது. அப்புறம் சரியாகி விட்டது.’
எப்படி அது உடனே சரியாக முடியும்?”
‘அட! சில மனிதர்களின் சுபாவம் அப்படித்தான். அதான் நடந்தது, நடந்துவிட்டது. மாற்ற முடியாது.
இதற்கு மேலும் ஏன் மாற்ற முடியாததை நம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிய வேண்டும்!’ என்றார் வெகு இயல்பாக.
ஆச்சரியத்தோடு குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க சீடர்களுக்குள்ளும் அதே இயல்பு நிலை மலர ஆரம்பித்தது.
அடுத்த நாள் காலை வேறு ஊர் நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.
அடுத்த ஊருக்குள் நுழைந்த ஜென் ஞானி, அந்த ஊர் சந்தை வழியாகச் செல்ல நேரிட்டது.
சந்தையில் தங்களுடைய குருநாதரின் குதிரையைப் பார்த்த சீடர்கள், “அதோ நம் குதிரை” என்று உற்சாகச் சத்தமிட்டார்கள்.
குதிரையை விற்பதற்காக நின்று கொண்டிருந்த திருடன் அதிர்ச்சியடைந்தான்.
‘அச்சச்சோ எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டோமோ!’ என பதைபதைத்துக் கொண்டிருந்த திருடனின் அருகே சென்ற ஜென் ஞானி, அவனுடைய தோளைத் தொட்டு, கண்களைப் பார்த்து மெல்ல சிரித்தார்.
திருடன் பேயறைந்து நின்றான்.
திருடனிடம் ‘சொல்லாதே!’ என்றார்.
மிரண்டு போன திருடன், ‘எது? என்ன? எதைச் சொல்கிறீர்கள்?’ என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
மீண்டும் சிரித்த சாது சொன்னார். ‘அதான் நடந்தது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. மாற்ற முடியாததை ஏன் இன்னும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்?. இந்தக் குதிரையை நீயே வைத்துக்கொள்.
உனக்கு எப்படி இந்தக் குதிரை கிடைத்தது என்பதை மட்டும் யாரிடமும் சொல்லாதே. மற்றவர்களுக்கு இது தெரிந்தால், நிஜமாகவே ஒருவர் மயங்கிக் கிடக்கும்போது கூட உதவாமல் போய்விடுவார்கள். மக்களின் சுபாவம் அப்படி. உன் சுபாவம் இப்படி’ என்று சொல்லிவிட்டுச் சென்ற ஜென் ஞானியைப் பார்த்து, கண்ணீர் வடித்து நின்று கொண்டிருந்தான் திருடன்.
அழுதபடியே குருவைப் பின் தொடர்ந்தான் திருடன். பிற்காலத்தில் முழுமையாய் மலர்ந்த மிகச் சிறந்த சீடனானான்.
இந்தக் கதை சொல்லும் ஒரேயொரு சத்தியத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
அது உங்களுடைய வாழ்வில் நிகழ்ந்த எப்பேர்ப்பட்ட அசம்பாவிதத்திலிருந்தும் உங்களை வெளிக்கொண்டு வந்து விடும்.
இனிவரும் அசம்பாவிதங்களில் இருந்து கூட நிமிடத்தில் வெளிவரும் பக்குவம் பெற்றுவிடுவீர்கள்..