Nov 8, 2010

கவிதைகள்!

ஒருதரம் காதல்
என்னை மீட்டுத் தந்தது
ஒருதரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத் தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத் தந்தது
நான்தான் அடிக்கடி
தொலைந்துவிடுகிறேன்! 


நிலம் தோண்டிப் புகுந்துகொள்ளவில்லை
வானில் ஏறிச் செல்லவில்லை
கடல் மேல் நடந்து செல்லவில்லை
நாடு நாடாக, ஊர் ஊராக
வீடு வீடாகத்
தேடினால் கிடைக்காமலா போவார்? 

 நான் அவன்
நானாக அவனும் அவனாக நானும்!
சாத்தியமில்லை!
எனது சந்தோஷங்கள் அவனது சந்தேகங்கள்!
எனது ஆசைகள் அவன் கற்பனை செய்யாதவை!
அவனது ஆசைகள் என்னை அடிமைகொள்பவை!
எனது கற்பனைகள் அவனுக்குப் புரியாதது!
அவனது கற்பனைகள் அலுத்துப்போனவை!
எனது நோக்கு அவனுக்குப் புதியது!
அவனது நோக்கு எனக்குப் பழையது!
அவன் வளர்ந்தும்... நான்!
நான் குழந்தை... அவன்!
நான் அவனாவதும் அவன் நானாவதும்!
சாத்தியமே இல்லை!
நான் நான் அவன் அவன்!